“பணத்துக்காக பேசுகிறார் தங்க தமிழ்ச்செல்வன்”- வெற்றிவேல்
காசு, பணம், துட்டுக்காக அமமுகவையும், தினகரனையும் தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்து பேசுவதாக அமமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் குற்றம்சாட்டியுள்ளார்.
தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு தொடர்பாக புதிய தலைமுறைக்கு வெற்றிவேல் பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ டிடிவி தினகரனை நேரில் சந்தித்தபோதுதங்க தமிழ்ச் செல்வன் எதுவும் சொல்லவில்லை. ஆனால் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்குவேன் என தங்க தமிழ்ச்செல்வனிடம் ஏற்கெனவே டிடிவி தினகரன் கூறிவிட்டார்.
எம்எல்ஏ பதவி போய்விட்டதாக குழந்தை போல அடம்பிடித்து பேசிவருகிறார் தங்க தமிழ்ச்செல்வன். மைக்கை பார்த்தும் இஷ்டத்துக்கு புத்தி பேதலித்தது போலவும் பேசுகிறார். மற்ற கட்சிகளில் சேர அனைத்து இடங்களிலும் தங்க தமிழ்ச்செல்வன் துண்டு போட்டு வைத்திருக்கிறார். காசு, பணம், துட்டுக்காக அமமுகவையும், தினகரனையும் தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்து பேசுகிறார்” என தெரிவித்தார்.
இதையும் படிக்கலாம்... 'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்
முன்னதாக டிடிவி தினகரனை தங்க தமிழ்ச்செல்வன் கடுமையாக விமர்சிக்கும் ஒலிப்பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் டிடிவி தினகரனிடம் பெட்டி பாம்பாக அடங்குவதற்கு என்ன இருக்கிறது என்றும் அவரா எனக்கு சோறு போடுகிறார் என்றும் தங்க தமிழ்செல்வன் சரமாரி கேள்விகளை எழுப்பியிருந்தார்.