சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: தமீமுன் அன்சாரி
வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி கூறியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவிற்கு வலிமையான தலைமை இருக்கக்கூடாது என பாரதிய ஜனதா நினைப்பதாகவும், அதனாலேயே வருமான வரித்துறை சோதனை நடைபெறுதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மத்திய அரசின் கைப்பாவையாக வருமான வரித்துறை செயல்படுகிறது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அவர் கூறினார்.
அதிமுகவின் எந்த அணியிலும் தாங்கள் இல்லை எனவும் உரிய நேரத்தில் அரசியல் சூழ்நிலையைப் பொருத்து அது முடிவு செய்யப்படும் என்றும் தமிமுன் அன்சாரி கூறினார்.
தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற நினைக்கும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திமுக, அதிமுகதான் மாறிமாறி ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.
கமல்ஹாசனின் அரசியல் பயணம் பற்றிக் கூறிய அவர், யார் வேண்டும் ஆனாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் முதலில் அவர்கள் மக்கள் பணி ஆற்றிவிட்டு வரவேண்டும் என்றார்.