புயல் பாதிப்பு குறித்து பிரதமரை சந்தித்தார் தம்பித்துரை
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரிக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிட்டதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை கூறினார்.
ஒகி புயலால் கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. வீதிகள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. ஒகி புயலின் வேகத்தில் பல வீடுகள் இருந்த தடம் தெரியாமல் போய்விட்டன. இதனால் வீட்டுக்குள் இருக்க வேண்டிய பாத்திர பண்டங்களும், வீட்டு உபயோகப் பொருட்களும் வீதியில் கிடக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதரத்தை இழந்துள்ளனர்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, “ஒகி புயலின் பாதிப்பு காரணமாக நிதியும் உடனடியாக தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிப்பதற்கு மத்திய கடற்படையினரின் உதவியும் தேவைப்படுகிறது. இவை இரண்டையும் செய்து தருமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன். இதைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியையும் சந்தித்து, நிவாரண நிதி உடனடியாக தேவை. அதை உடனடியாக தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என கேட்டிருக்கிறோம். அவரும் நிதி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்” என்று கூறினார்.