“கம்யூனிஸ்ட்டுகள், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காதது தவறு” - தா.பாண்டியன்

“கம்யூனிஸ்ட்டுகள், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காதது தவறு” - தா.பாண்டியன்

“கம்யூனிஸ்ட்டுகள், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காதது தவறு” - தா.பாண்டியன்
Published on

வயநாட்டில் ராகுல் போட்டியிடுவதை இவ்வளவு தீவிரமாக கம்யூனிஸ்ட்டுகள் எதிர்க்க வேண்டியதில்லை என்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். அதேவேளையில் அவர் தென்னிந்தியாவிலும் போட்டியிட வேண்டும் என்று இங்குள்ள காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட ராகுல், ''தற்போதைய மத்திய அரசு மீது தென்னிந்திய மக்களுக்கு எதிர்ப்புணர்வு தான் உள்ளது.  எனவே, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்பதை தென்னிந்தியாவுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இதனால் நான் கேரளாவிலிருந்து போட்டியிடுகிறேன்''  எனத் தெரிவித்தார். அதன்படி வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி களம் இறங்குவது கேரள கம்யூனிஸ்ட்டுகள் இடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ''ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஆச்சரியம் இல்லை. அவர் பாஜகவை எதிர்த்து போட்டியிடவில்லை. இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்த்து போட்டியிடுவதால் காங்கிரஸுக்கு கடும் போட்டியாக இருப்போம்'' என்று தெரிவித்தார். 

அதேவேளையில் கேரளாவில் தன்னுடைய பிரச்சாரத்தில், கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேச மாட்டேன் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இந்நிலையில் ராகுல்காந்தி குறித்த கம்யூனிஸ்ட்டுகளின் பார்வை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் 'இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார். 

அதில் பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்காதது கம்யூனிஸ்ட்டுகள் செய்த பெரிய தவறு எனத் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், வகுப்புவாத ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் கடமையை மறந்து, தங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி என்ற அளவிலேதான் இடதுசாரி கட்சித் தலைவர்கள் சிந்திப்பதாகவும், வயநாட்டில் ராகுல் போட்டியிடுவதை இவ்வளவு தீவிரமாக கம்யூனிஸ்ட்டுகள் எதிர்க்க வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்தத் தேர்தல் அறிக்கையின் கதாநாயகன் 72 ஆயிரம் நிதி உதவித் திட்டம்தான் என்றும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் அது ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com