“நாங்கள் ஒதுக்கப்பட்ட கிராமமாகவே இருந்துவிடுகிறோம்”- வேதனையில் மக்கள் அறிவிப்பு

“நாங்கள் ஒதுக்கப்பட்ட கிராமமாகவே இருந்துவிடுகிறோம்”- வேதனையில் மக்கள் அறிவிப்பு
“நாங்கள் ஒதுக்கப்பட்ட கிராமமாகவே இருந்துவிடுகிறோம்”- வேதனையில் மக்கள் அறிவிப்பு

தென்காசி மாவட்டம் செங்கானூர் கிராம மக்கள் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பேனர் வைத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில்  செங்கானூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200 குடும்பங்கள் இருக்கின்றன. இந்த கிராமத்திற்கும் ஆழ்வார்குறிச்சிக்கும் இடையே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரெயில்வே சுரங்கபாதை அமைக்கப்பட்டது. இந்த வழியாக தான் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் என அனைவரும் நகர பகுதிக்கு சென்றுவர முடியும்.

இந்த சுரங்க பாதையில் அவ்வப்போது பெய்யும் மழையால் தண்ணீரானது சுமார் 10 அடி உயரத்திற்கு நிரம்பி அப்பகுதி மக்கள் அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெளியேற முடியாமல் தத்தளித்துக் வந்தனர். மேலும் அந்த சமயத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த தண்ணீரில் நீந்தி சுரங்க பாதையை கடந்து சென்று வந்தனர்.

இதனை கண்டித்தும், மாற்று பாதை அமைத்து தராததை கண்டித்தும் ரெயில் மறியல் மற்றும் சமையல் செய்யும் போராட்டம் நடத்தினர்.மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு மூலமாகவும் தங்களது கோரிக்கைகளை வைத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மாற்று பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அந்த மாற்று பாதை கண் துடைப்புக்கானது எனக் கூறும் மக்கள் அதுவும் முழுமையாக நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.

இதேபோல் கிராமத்தில் சாலை வசதி இல்லை, ஆறு நிறைய குடிநீர் இருந்தும் ஊருக்கு குடிநீர் வசதி இல்லை, விவசாய நிலங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லை மற்றும் சுடுகாடு வசதி இல்லை என மொத்தத்தில் அடிப்படை வசதி இல்லாத ஒரு கிராமமாக எங்கள் கிராமம் இருக்கிறது. இதனால் எங்கள் கிராமத்திலிருந்து பெண் எடுப்பதற்கும், பெண் கொடுப்பதற்கும் பிற பகுதியினர் தயங்குகின்றனர் என்று அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

இதற்கிடையில் இன்றைய செய்தித்தாளில் செங்கானூர் கிராமத்தில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரசுரமாகி உள்ளது. அங்கு உள்ள மக்கள் படிக்க தெரியாதவர்கள் என்று நினைத்து  பஞ்சாயத்து நிர்வாகம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் செய்யப்பட்ட பல நலத்திட்டங்களை தமிழிலும், இந்த ஊருக்கு செய்யப்பட்டதாக சொல்லும் நலத்திட்டங்களை ஆங்கிலத்திலும் பிரசுரமாக்கியுள்ளது என்றும், இவர்கள் சொல்வது போல் எங்கள் பகுதியில் ஒரு ரூபாய்க்கு கூட எந்த பணிகளும் நடைபெறவில்லை. ஆங்கிலத்தில்  நலத் திட்டங்கள் செய்ததாக  வெளியிட்டு இருப்பது வேதனை அளிக்கிறது என்றும் செங்கானூர் கிராமத்தினர் கூறுகிறார்கள்.

எனவே வருகிற 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்றும், அரசியல் கட்சியினர் யாரும் எங்களது ஊருக்குள் வரவும் வேண்டாம், எங்களது பிரச்னையில் தலையிடவும் வேண்டாம், எங்களது கிராமம் ஒதுக்கப்பட்ட கிராமமாக இருந்து விடட்டும் யாரும் எங்களை சந்திக்க வரவேண்டாம் என்றும் அந்த கிராமத்தினர் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

மேலும் மேற்கண்ட அனைத்து சமூக பிரச்னைகளை தீர்க்கும் வரை நாங்கள் வருகிற அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்று ஊரின் முன்பு பேனர் வைத்து தங்கள் எதிர்ப்பை கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com