கருணாநிதியை சந்திக்கிறார் சந்திரசேகர் ராவ் - மூன்றாவது அணிக்கு வியூகமா?
திமுக தலைவர் கருணாநிதியை தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் நாளை மறுநாள் சந்திக்கவுள்ளார். கருணாநிதியிடம் நலம் விசாரித்த பின்னர் ஸ்டாலினையும் சந்தித்து ஆலோசனை செய்கிறார்.
கருணாநிதி உடல் நலக் குறைவு காரணமாக தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். அவ்வபோது மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடைய வீட்டில் ஓய்வு எடுத்து வரும் கருணாநிதியை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். தமிழகத்தைத் தாண்டி தேசிய அளவிலான தலைவர்களும் கருணாநிதியை சந்தித்த வண்ணம் உள்ளனர். சென்னை வந்திருந்த பிரதமர் மோடியும் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் கருணாநிதியை சந்திக்க உள்ளார். காங்கிரஸ் அல்லது பாஜக அல்லாத மாற்று அணி உருவாக வேண்டும் என முதலில் குரல் கொடுத்தவர் சந்திர சேகர் ராவ். இவரது இந்தக் கருத்துக்கு முதலில் ஆதரவு குரல் கொடுத்தவர் மம்தா பானர்ஜி. ஆதரவு கொடுத்த கையோடு ஸ்டாலினுக்கு போனில் பேசிய அவர் ஆதரவு கோரினார். இதனால், மூன்றாவது அணி குறித்த வளைத்திற்குள் ஸ்டாலினும் நுழைந்துவிட்டார். மம்தாவும் பாஜகவுக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதனையடுத்து மாநிலக் கட்சிகளை ஒன்றிணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு, தான் ஆதரவளிப்பதாகத் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தி.மு.க எப்போதும் பிராந்திய கட்சிகளின் ஒற்றுமைக்காகவும் வலிமையான கூட்டாட்சிக்காகவும் துணை நிற்கும். பா.ஜ.க-வின் சர்வாதிகார மற்றும் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சிகளை இணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சியை நான் ஆதரிக்கிறேன்” எனப் பதிவிட்டு இருந்தார்.
மூன்றாவது அணி குறித்த பேச்சு அடிபட்டு வரும் வேளையில், கருணாநிதி, ஸ்டாலின் உடனான சந்திர சேகர் ராவின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.