எப்படி உள்ளது தெலங்கானா அரசியல் களம் ?

எப்படி உள்ளது தெலங்கானா அரசியல் களம் ?
எப்படி உள்ளது தெலங்கானா அரசியல் களம் ?

தெலங்கானா மாநிலத்தின் முதல் ஆட்சி காலம் முடியும் முன்னேரே தேர்தல் நடைபெறவுள்ளதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள 5 மாநிலத் தேர்தல்களில் தெலங்கானா தேர்தலும் ஒன்று. ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்டு புதிதாய் தோற்றுவிக்கப்பட்ட தெலங்கானா ஆட்சி முடிவடையும் 9 மாதத்திற்கு முன்னே அதனைக் கலைத்து தேர்தலை எதிர்கொள்கிறார் முதல்வர் சந்திரசேகர ராவ். தெலங்கானாவில் வரும் 7ம் தேதி இங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கும், தெலுங்கு தேசம் - காங்கிரஸ்- இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை இணைந்துள்ள மகா கூட்டணிக்கும் தான் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. 

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியை வீழ்த்த முதல் முறையாக காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது தெலுங்கு தேசம் கட்சி. ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மகா கூட்டணியில் காங்கிரஸ் 94 இடங்களிலும், தெலுங்கு தேசம் 13 இடங்களிலும் தெலங்கானா ஜன சமிதி 8 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 இடங்களிலும் போட்டியிடுகின்றன. பாரதிய ஜனதா 119 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் 7 தொகுதிகளில் வெற்றி பெற்று இஸ்லாமியர்களிடையே செல்வாக்குடன் இருக்கும் எம்ஐஎம் கட்சி, இம்முறை 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தெலங்கானாவில் பெண்களுக்கு கல்யாண லக்ஷமி திட்டம், விவசாயிகளுக்கு ஆடு வழங்கும் திட்டம் உள்ளிட்டவை அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் குடும்ப அரசியல் செய்யப்படுவதாக சந்திரசேகர ராவ் மீது கடுமையான குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. ஏழைகளுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதி மற்றும் தெலங்கானா பிரிவினைக்கு முக்கிய பங்கு வகித்த உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாதது உள்ளிட்டவற்றை முன்வைத்து எதிர்க்கட்சியினர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தலில் விவசாயிகள், சிறுபான்மையினரின் வாக்குகளை மையப்படுத்தி ஆளும் கட்சியினரும், எதிர் கட்சியினரும் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். கிறிஸ்வத தேவாலயங்கள், பள்ளி வாசல்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி வாக்குறுதி அளித்துள்ளது. இஸ்லாமியர்களுக்கு 4 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என காங்கிரஸ் கூறியுள்ளது. தெலங்கானாவில் கட்சிகள் அமைத்துள்ள தேர்தல் வியூகங்கள் வரும் 11ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தான் தெரியவரும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com