காங்கிரஸில் இணைந்த டிஆர்எஸ் தலைவர்கள் - சந்திரசேகர் ராவுக்கு நெருக்கடி?

காங்கிரஸில் இணைந்த டிஆர்எஸ் தலைவர்கள் - சந்திரசேகர் ராவுக்கு நெருக்கடி?
காங்கிரஸில் இணைந்த டிஆர்எஸ் தலைவர்கள் - சந்திரசேகர் ராவுக்கு நெருக்கடி?

தெலுங்கானா அரசியலில் முக்கிய திருப்பமாக டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். 

டிசம்பரில் சட்டப்பேரவை தேர்தல்:

தெலுங்கானா சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், செப்டம்பர் முதல் வாரத்தில் சந்திரசேகர் ராவ் பேரவையை கலைத்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுடன் சட்டப்பேரவை நடைபெறுவதை தவிர்க்கும் பொருட்டு சந்திர சேகர் ராவ் இந்த முடிவினை எடுத்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து, ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களோடு சேர்த்து ஐந்தாவதாக தெலுங்கானா மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 7ம் தேதி தேர்தலும், டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. 

சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. கூட்டணி பேச்சும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை வீழ்த்த காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேசம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

காங்கிரஸில் சேர்ந்த டிஆர்எஸ் தலைவர்கள்

இந்நிலையில், தெலுங்கானா அரசியலில் முக்கிய திருப்பமாக டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். 

கஜ்வெல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ நர்சா ரெட்டி மற்றும் நரயங்கெத் எம்.எல்.சி ராமுலு நாயக் இருவரும் டெல்லியில் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளனர். டிஆர்எஸ் கட்சியை ஆட்சியில் இருந்து தூக்கி எறிவதற்கான நேரம் வந்துவிட்டதாக இருவரும் கூறியுள்ளனர்.

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக நர்சா ரெட்டி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் இத்தகைய முடிவினை எடுத்துள்ளார். நர்சா ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து டிஆர்எஸ் கட்சிக்கு தாவியவர் தான். 2014 தேர்தலில் சந்திர சேகர் ராவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். தோல்விக்குப் பின்னர் அவர் கட்சியில் இணைந்துவிட்டார். 

நெருங்க முடியாத இடத்தில் இருக்கிறார் சந்திரசேகர் ராவ் - நர்சா ரெட்டி

காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நர்சா ரெட்டி, “என்னுடைய வழக்கை முழுவதும் மக்களுக்காக பணியாற்றி வருகிறேன். பல ஆண்டுகளாக பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளேன். மக்களின் நலனுக்காகவே தேர்தலில் தோற்ற பின்னர் டிஆர்எஸ் கட்சியில் இணைந்தேன். சந்திரசேகர் ராவ் மக்களிடம் இருந்து தள்ளியே இருக்கிறார். மக்களின் நலன்களில் அவர் கவனம் செலுத்துவதில்லை. தொடக்கத்தில் இதற்கு முன்பு இருந்த முதல்வர்களை என்னால் எளிதில் சந்திக்க முடிந்தது. மக்களின் நலன்களுக்காக அவர்களின் கதவுகள் எப்போதுமே திறந்து இருக்கும். ஆனால், சந்திரசேகர் ராவ் பண்ணை வீட்டின் கதவை கூட தாண்டி செல்ல முடியவில்லை. அப்படியென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? கட்சி என்னை சஸ்பெண்ட் செய்த முடிவை வரவேற்கிறேன்” என்றார். 

ராகுலை சந்தித்த மற்றொரு தலைவர்

இவர்கள் இருவர் மட்டுமல்லாது மூத்த நிஜாம்பெத் தலைவரும் முன்னாள் மாநிலங்களவை எம்.பியுமான ஸ்ரீனிவாஸ் ராகுல் காந்தியை சந்தித்து இருந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் சேர்வது குறித்து எவ்வித கருத்தினையும் தெரிவிக்கவில்லை. முன்னாள் அமைச்சரான இவர், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும் பதவி வகித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு தேர்தலில் டிஆர்எஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார் ஸ்ரீனிவாஸ். அதனையடுத்து, 2015 இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து டிஆர்எஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைய உள்ளதாக பேச்சுகள் அடிபட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com