‘குடியரசுத் தலைவர் ஆட்சி’ - தெலங்கானா எதிர்க்கட்சிகள் போர்க்கொடி
தெலங்கானா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக குரல் எழுப்பியுள்ளன. சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மாபெரும் கூட்டணியை அமைத்துள்ளன.
இந்தக் கூட்டணியில், தெலுங்கானா தெலுங்கு தேசம் கட்சி, தெலுங்கானா காங்கிரஸ், இடதுசாரி கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து நேற்று தெலங்கானா ஆளுநர் நரசிம்ஹன்னை சந்தித்தனர். அப்போது, சந்திரசேகர் ராவ் அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும், தெலுங்கானாவில் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தெலுங்கு தேசம் கட்சியின் தெலங்கானா பிரிவு தலைவர், ராம்ணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சடா வெங்கட் ரெட்டி, தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் உத்தம் குமார் ரெட்டி உள்ளிட்டோர் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தார்கள். முன்னதாக, ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி உருவாக்கியுள்ளது. 35 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் உள்ள மெகா கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி இடம்பெற்றுள்ளது.
தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை வீழ்த்தும் நோக்கில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணையவுள்ளதாக தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராம்ணா கூறியுள்ளார். மக்கள் அமைப்புகள், தொழிலாளர்கள், பெண்கள் குழுக்கள் என அனைத்து தரப்பின் ஆதரவையும் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
கடந்த செப்டம்பர் 6ம் தேதி தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைமையிலான தனது அரசை முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் கலைத்தார். மக்களவை தேர்தலுடன் தெலுங்கானா சட்டசபை தேர்தல் வருவதை தவிர்க்கும் பொருட்டு சந்திரசேகர் ராவ் இந்த முடிவினை எடுத்துள்ளார். தற்போது தெலங்கானாவில் இடைக்கால அரசு உள்ளது. இதனையடுத்து நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.