அணி மாறும் எம்எல்ஏ...? டிடிவியின் செல்வாக்கு சரிகிறதா..?
கர்நாடகாவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களில் ஒருவர் தமிழக காவல்துறையினருடன் செல்ல ஒப்புதல் அளித்துள்ளார்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் கர்நாடக மாநிலம் குடகுவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். எம்எம்ல்ஏக்கள் தங்கியுள்ள விடுதிக்குள் இன்று சென்ற தமிழக காவல்துறை அதிகாரிகள் எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. சுய விருப்பத்தின் பேரில் தான் தங்கி உள்ளார்களா அல்லது கட்டாயத்தின் பேரில் தங்க வைக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தமிழக காவல்துறை அதிகாரிகளுடன் தமிழகத்திற்கு வர எம்எல்ஏக்களில் ஒருவர் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அவர் யார்..? எந்தத் தொகுதி எம்எம்ஏ என்பது குறித்த விவரங்கள் வெளிவரவில்லை.
கடந்த மாதம் 22-ஆம் தேதி முதலமைச்சரை மாற்றக் கோரி டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். பின்னர், கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன் தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிக்கொண்டு முதலமைச்சர் பழனிசாமிக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதனால் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 18 ஆக சரிந்தது. இந்நிலையில் குடகு விடுதியில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்களில் மேலும் ஒருவர் தமிழக காவல்துறை அதிகாரிகளுடன் செல்ல ஒப்புதல் கொடுத்துள்ளதால் டிடிவிக்கு ஆதரவு கொடுக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மேலும் சரிவடையும் எனத் தெரிகிறது.