லாலு குடும்பத்தின் ரூ.180 கோடி சொத்துக்கள் முடக்கம்
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் குடும்பத்தின் ரூ.180 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியுள்ளது. கடந்த ஆண்டு அமலுக்கு வந்த பினாமி சொத்து பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஏராளமான சொத்துக்களை மற்றவர்கள் பெயரில் வாங்கி, பின்னர் லாலுவின் மகன், மகள்கள் பெயர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு வாங்கப்பட்ட, ரூ.1000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லாலுவின் மகள் மிசா பார்தி மற்றும் அவரது கணவர் சைலேஷ் குமார், லாலுவின் மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, லாலுவின் மகனும், பிஹார் மாநில துணை முதவருமான தேஜஸ்வி யாதவ், அவரது மகள்கள் சந்தா, ராகினி ஆகியோருக்கு சொந்தமான ரூ.180 கோடி சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியுள்ளது.