காங்கிரஸ் கேட்டுள்ள தொகுதிகள் எவை? - கே.எஸ்.அழகிரி போட்டியில்லையா?

காங்கிரஸ் கேட்டுள்ள தொகுதிகள் எவை? - கே.எஸ்.அழகிரி போட்டியில்லையா?

காங்கிரஸ் கேட்டுள்ள தொகுதிகள் எவை? - கே.எஸ்.அழகிரி போட்டியில்லையா?
Published on

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் வழங்கப்படும் எனக் கூறப்படும் நிலையில், எந்தெந்த தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழக தேர்தல் களம் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் இணைந்த நிலையில் தேமுதிக இன்னமும் முடிவெடுக்காமல் இருக்கிறது. அதனால் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வர இருப்பதாகவும், அதன் பிறகே தொகுதி பங்கீடு இறுதிபெறும் எனவும் அதிமுக தெரிவித்துள்ளது. 

அதேபோல, திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு அறிவிப்பும் அடுத்த சில மணி நேரங்களில் வெளியாக இருக்கிறது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் அதன் தோழமைக் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படுமென்ற ஆலோசனையும் நடைபெற இருக்கிறது.

சென்னை வந்துள்ள காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் உடன் கிண்டியிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த ஆலோசனையில் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், சஞ்சய்தத், வசந்தகுமார், விஜயதாரணி எம்எல்ஏ, வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். திமுகவுடன் சற்று நேரத்தில் முகுல் வாஸ்னிக் பேச உள்ள நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் வழங்கப்படும் எனக் கூறப்படும் நிலையில், எந்தெந்த தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் வழக்கம்போல ஒதுக்கப்படும் புதுச்சேரி தொகுதியை இம்முறையும் காங்கிரஸ் கேட்டுள்ளதாக தெரிகிறது. 

இதேபோல தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர சிவகங்கை, சேலம், ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளையும் தங்களுக்கு ஒதுக்குமாறு திமுகவிடம் காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுகவிடம் காங்கிரஸ் அளித்துள்ள பட்டியலில் கடலூர் தொகுதி இடம்பெறவில்லை. கே.எஸ்.அழகிரி வழக்கமாக போட்டியிடும் கடலூர் தொகுதி கேட்கப்படாததால், அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com