சென்னைக்கு அருகில் புதிய பன்னாட்டு விமானநிலையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னைக்கு அருகில் புதிய பன்னாட்டு விமானநிலையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
சென்னைக்கு அருகில் புதிய பன்னாட்டு விமானநிலையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னைக்கு அருகில் உலகத்தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமானநிலையம் அமைக்கப்படும் என்று எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

விழாவில் முதல்வர் பழனிசாமி பேசுகையில், “நாட்டிலேயே பெண்களுக்கான பாதுகாப்பு சூழல் நிலவும் மெட்ரோ நகரங்களில் சென்னை முதலிடம் வகிக்கிறது. உலக முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க சென்னைக்குதான் முதலிடம் தருகிறார்கள். இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வேலைவாய்ப்பு பெற சென்னையில் இளைஞர்கள் குவிந்து வருகின்றனர். 

திரைத்துறையில் இருந்து வந்தவரை முதல்வராக மக்கள் ஏற்றுக் கொண்டது எம்ஜிஆரை தான். இறப்பை கூட வெற்றி கண்டு மக்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். தமிழகத்தின் சத்துணவுத் திட்டத்தை மத்திய அரசே பின்பற்றக் காரணம் எம்ஜிஆர் தான். 

எம்ஜிஆர் என்ற சக்தி தோன்றி இருக்காவிட்டால் தமிழகத்தின் நிலை நிற்கதியாகி இருக்கும். எம்ஜிஆரின் கட்சி அவரது படம் போல 100 நாள்தான் இருக்கும் என்றவர்கள் கோட்டைக்கே வர முடியவில்லை. 

சீர்மிகு சென்னை திட்டத்தின் கீழ் ரூ.953 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். 100 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் வெள்ளத்தடுப்புப் பணிகளால் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்காது. 

அதிமுக அரசால் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்தது வருகிறது. சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முதற்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட வழித்தட பணிகள் விரைவில் தொடங்கப்படும். 84 அறிவிப்புகளுக்கு ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆடம்பர விழா என குறிப்பிட்டார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மக்களுக்கு நன்மை பயக்கின்ற விழா. அதிமுக அரசு மக்களுக்கான அரசு; மக்களுக்காக பாடுபடுகின்ற அரசு. செயல்படாத அரசாக இருந்தால் விருதுகளை வெல்ல முடியுமா என எதிர்க்கட்சிகள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆங்கிலேயருக்கு பிறகு அதிக முறை ஜார்ஜ் கோட்டையை ஆண்ட கட்சி அதிமுகதான். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்தவிடாமல் தடுக்க முயற்சித்தவர்கள் தோல்வி அடைந்தார்கள். ஜெயலலிதா இருந்தபோது சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்ததோ, அப்படியேதான் தற்போதும் உள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது, சட்டத்தின் முன் அனைவரும் சமமாக கருதப்படுகின்றனர். 

சென்னை அருகே உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். கிராமங்களில் முதலமைச்சர் வீட்டுக் காய்கறி உற்பத்தி திட்டம் தொடங்கப்படும். சென்னையில் 4 இடங்களில் ரூ.203 கோடி துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும். 

பள்ளிக்கரணையில் 100 படுக்கைகள் கொண்ட தொழிலாளர் மருத்துவனை அமைக்கப்படும். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும். சென்னையில் ரூ.400 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. போரூர் - பூவிருந்தவல்லி சாலைக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com