10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக வழக்கு தொடுத்து மிகப்பெரிய வரலாற்று பிழையை செய்துள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சமீபத்தல் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவுடன் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. இதனைத்தொடர்ந்து நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
இதனையடுத்து வரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பொதுப்பிரிவு ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்கெனவே தெரிவித்தார். இத்திட்டம், ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவான பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வழி செய்யப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு அளித்துள்ளது.
இந்நிலையில், சென்னை பூவிருந்தவல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காலம் பதில் சொல்லும் எனவும் 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக வழக்கு தொடுத்து மிகப்பெரிய வரலாற்று பிழையை செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.