அப்போதே நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி கொடுத்தவர் ரஜினி - தமிழிசை
ரஜினிகாந்தின் அறிக்கை தெளிவான அறிக்கை என பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு.நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு.நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. தமிழ்நாட்டின முக்கிய பிரச்னை தண்ணீர். வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான வலுவான ஆட்சி அமைத்து, யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்னையை நிரந்தமாக தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களா அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் பாஜகவுக்கு எதிராக ரஜினிகாந்த் திரும்பிவிட்டாரோ என்று பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதனிடையே சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக் கொள்ள மாட்டேன் என்றும் அப்படியே கிழிந்தாலும் வேறு சட்டை மாற்றிக்கொண்டுதான் வருவேன் எனவும் தெரிவித்தார். மேலும் டெல்லி இல்லாமல் ஆட்சி நடத்துவோம் என தமிழ்நாடும், தமிழ்நாடு இல்லாமல் ஆட்சி நடத்துவோம் என டெல்லியும் நினைக்கக் கூடாது என்றார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளருக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்திரராஜன் “ரஜினியின் அறிக்கை தெளிவான அறிக்கை. அவரின் அறிவிப்பால் பாஜகவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. எங்களை பொறுத்தவரை அவரது அறிக்கையை நேர்மறையாகத்தான் பார்க்கிறோம். அப்போதே நதிநீர் இணைப்பு ரூ. 1 கோடி கொடுத்தவர் ரஜினிகாந்த். டெல்லி இல்லாமல் தமிழகம் இல்லை, தமிழகம் இல்லாமல் டெல்லி இல்லை என்ற கமலின் கருத்து வரவேற்கத்தக்கது. சட்டையை கிழித்து கொண்டு வரமாட்டேன், புது சட்டையுடன் தான் வருவேன் என்ற கமலின் கருத்து சரியானது. பியூஸ் கோயல் வருகை இப்போது இல்லை. விரைவில் அவரது வருகை குறித்து அறிவிப்பேன்” எனத் தெரிவித்தார்.