மலேசியா மணலை பயன்படுத்த வேண்டும்: தமிழிசை கருத்து
மலேசியா மணல் இறக்குமதி செய்யப்பட்டு தேங்கி இருப்பதால், அதை பயன்படுத்த வேண்டும் என்பது சரியான நடவடிக்கை தான் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6 மாதங்களுக்குள் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் மேற்கொண்டு புதிதாக மணல் குவாரிகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், சட்டவிரோத மணல் விற்பனைக்கு துணை நிற்கும் அதிகாரிகள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “இயற்கை வளங்களை பாதுகாக்கவும், மணல் கொள்ளையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்று மணலுக்கு மாற்று என்ன என்பதை அரசு யோசித்திருக்க வேண்டும். நீதிமன்றத்தின் எந்த தீர்ப்பாக இருந்தாலும், அது கட்டுமானப் பணியையோ, மற்ற தொழில்களையோ, தொழிலாளர்களையோ, நாட்டின் முன்னேற்றத்தையோ பாதிக்கக்கூடாது என்பதில் அனைவருமே குறியாக இருக்க வேண்டும். மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் விநியோகிக்கவும் முடியாமல், அனுப்பவும் முடியாமல் ஒரே இடத்தில் தேங்கிக் கிடந்தது. அதனால் அந்த மணலை பயன்படுத்த வேண்டும் என்பது சரியான நடவடிக்கை தான்” என்று கூறினார்.