“தமிழிசை பதவி நீக்கமா?” - முரளிதர் ராவ் மறுப்பு
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைமையில் மாற்றம் செய்யப்படும் என சில ஊடகங்களில் வெளியான தகவலை அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ் மறுத்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். இவர் இப்பதவியிலிருந்து மாற்றப்பட உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் அந்தத் தகவல் தவறு என பாஜகவின் தமிழகப் பொறுப்பார் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷாவுக்கு தாம் அளித்த அறிக்கையை அடுத்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமையில் மாற்றம் ஏற்படும் என சில ஊடகங்களில் செய்தி வெளியானதாக கூறியுள்ளார். ஆனால் இந்தச் செய்தி அடிப்படை ஆதாரமற்றது, உண்மைக்கு புறம்பானது என்றும் உள்நோக்கம் கொண்டது என்றும் முரளிதர ராவ் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இதுதொடர்பாக பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தான் பாஜக மாநிலத் தலைவராக பதவியேற்றில் இருந்தே இதுபோன்ற வதந்தி செய்திகள் வருவதாக குறிப்பிட்டார். தற்போது உண்மை நிலவரத்தை விளக்கிய முரளிதர் ராவிற்கு தனது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.