“ஆட்சிக்கு வரும்முன் மோடி எங்களிடம் ஒரு வார்த்தை சொன்னார்” - தமிழிசை
2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வரும்முன் எங்களிடம் ஒரு வார்த்தை சொன்னார் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாமக 7 தொகுதிகளிலும் பாஜக 5 தொகுதிகளிலும் தேமுதிக 4 தொகுதிகளிலும் தமாகா, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. ஆனால் பாஜக தரப்பில் இன்னும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை.
இதையடுத்து மாநில பாஜக தலைவர் தமிழிசை நேற்று கண்டிப்பாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் பட்டியல் வெளியாகவில்லை.
இதனால் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏன் என்ற கேள்வி எழும்பியுள்ளது. இதற்குப் பதிலளித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், “தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் காலதாமதம் இல்லை. தமிழக வேட்பாளர் பட்டியல் உறுதியானது. அனைத்து மாநிலத்திற்கும் வேட்பாளர் பட்டியல் உறுதி செய்வதால் நேரம் எடுத்து கொள்கிறார்கள். அதை காலதாமதம் என்று கூறமுடியாது.
பிரதமர், அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் பிரம்மாண்ட பரப்புரைக்கு தமிழகம் வரவுள்ளனர். நல்ல திட்டங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காக ''மீண்டும் மோடி; வேண்டும் மோடி''. 2014 ஆம் ஆண்டு பிரதமர் ஆட்சிக்கு வரும்முன் எங்களிடம் ஒரு வார்த்தை சொன்னார். அதாவது தொண்டர்கள் மீண்டும் மக்களிடம் பாஜகவிற்காக ஓட்டு கேட்டு செல்லும்போது தலை குணிந்து செல்லக்கூடாது.
தலை நிமிர்ந்து செல்ல வேண்டும் எனக் கூறினார். அதேபோல், பாஜக அரசின் நலத்திட்டங்களை முன்வைத்து தலை நிமிர்ந்து ஓட்டு கேட்போம். எவ்வளவுதான் விமர்சனங்களை வைத்தாலும் நாங்கள் தொடர்ந்து நல்ல திட்டங்களை கொடுத்து கொண்டு வருகிறோம்.” எனத் தெரிவித்தார்.