தமிழிசை நையாண்டி: கமல் தலைப்புச் செய்தியாகலாம்; தலைவராக முடியாது!
நடிகர் கமல்ஹாசன் தலைப்பு செய்தியாகலாம், தலைவராக முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் இன்று புதிய கட்சியை தொடங்குகிறார். இதை முன்னிட்டு இன்று காலை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வீட்டில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், அடுத்தடுத்த ஊர்களுக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறார். மாலை மதுரையில் நடைபெறவுள்ள அவரது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில், உரையாற்றி, கட்சி, கொடி, கொள்கைகளை அறிமுகம் செய்கிறார்.
இந்நிலையில் கமல்ஹாசனின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழிசை, “சகோதரர் கமல்ஹாசன் இன்று கட்சி தொடங்குகிறார். இதை ஒரு போட்டியில் அவசர அவசரமாக தொடங்குகிறார் என்று நினைக்கின்றேன். திரைப்படப்போட்டி தற்போது தரைப்பட போட்டியாக மாறியுள்ளது. இத்தனை நாட்கள் அரசியலுக்கு வருவார்களா? இல்லையா? என்ற யூகங்கள் இருந்த நிலையில், தற்போது திடீரென கட்சியை தொடங்குகின்றனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் நடிகர்கள் வந்து தான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற சூழ்நிலை தமிழகத்தில் இல்லை. தலைப்புச் செய்தியாக கமலின் கட்சி இருக்கலாமே தவிர, அவரால் தலைவராக இருக்க முடியாது” என்று கூறினார்.