தமிழக அரசு மத்திய அரசிடம் சரணடைந்துவிட்டது: மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் வரை திமுகவின் போராட்டம் தொடரும். தமிழக அரசு மத்திய அரசிடம் சரணடைந்துவிட்டது. ஆளும் அதிமுகவினரின் நோக்கம் என்னவென்றால், மத்தியில் ஆளும் பாஜகவின் காலில் விழுந்து சரணாகதி அடைவதுதான். அவர்கள் மீது உள்ள வருமான வரித்துறை வழக்கு, தேர்தல் கமிஷனில் இருக்கும் வழக்கு, குட்கா வழக்கு, அமலாக்கத்துறை வழக்கு ஆகியவற்றில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்’எனத் தெரிவித்தார்.
இதனிடையே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி திமுக சார்பில் இன்று நடத்த இருந்த மனிதச் சங்கிலி போராட்டம், சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஒத்தி வைக்கப்பட்டது. சேலத்தில் கட்சராயன் ஏரியை பார்வையிடச் சென்ற மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மூன்று மாவட்டங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அவர்களும் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.