மும்மொழி குறித்த ட்விட்டர் பதிவை நீக்கினார் முதல்வர் பழனிசாமி
தமிழை மற்ற மாநிலங்களில் விருப்பமொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற ட்வீட்டை நீக்கினார் முதல்வர் பழனிசாமி.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, மூன்று மொழிக் கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தி மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் அதேபோல, இந்தி மொழி பேசும் மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் தவிர பிற பகுதிகளில் ஏதேனும் ஒரு மொழியை கூடுதலாக கற்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகம், கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கி திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டது. இந்தப் புதிய வரைவு திட்டத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த முதலமைச்சர் பழனிசாமி, பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிப்பது உலகின் தொன்மையான ஒரு மொழிக்கு செய்யும் சேவையாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, மும்மொழி கொள்கையை தமிழக முதல்வர் ஆதரிக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன. முதலமைச்சரின் கருத்து மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக உள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் சிலரும் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், இந்தி மொழி தொடர்பான தன்னுடைய ட்விட்டர் பதிவை முதலமைச்சர் பழனிசாமி நீக்கியுள்ளார்.