பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் குழந்தையை வீசிச்சென்ற பரிதாபம்.. போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் மர்மநபர் வீசிவிட்டுச் சென்ற பிறந்த சிலமணி நேரமே ஆன ஆண் குழந்தை மிட்டெடுக்கப்பட்டுள்ளது.
காட்டுப்பாக்கத்தில் பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று அழுத சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற சபாபதி என்பவர் குழந்தையை மீட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்றார். பின்னர் மேல்களத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
பின்பு குழந்தையை மீட்டு பாதுகாப்பாக வைத்திருந்த சபாபதியிடம் இருந்து குழந்தையை வாங்கிய மருத்துவக் குழுவினர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். குந்தையை வீசிவிட்டு சென்ற மர்மநபர்கள் குறித்து பாணாவரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.