\
பசி இல்லை.. அதிக பசி.. இரண்டுமே பிரச்னைதான்... கண்டுக்காம விடாதீங்க!

பசி இல்லை.. அதிக பசி.. இரண்டுமே பிரச்னைதான்... கண்டுக்காம விடாதீங்க!

பசி இல்லை.. அதிக பசி.. இரண்டுமே பிரச்னைதான்... கண்டுக்காம விடாதீங்க!
Published on
தேவையான அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உணவை எடுத்துக்கொள்வதை ஒருவித வியாதி என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால்தான் உணவின் அளவு மாறுபடுகிறது. இதனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு உறுப்புகள் செயலிழத்தல் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகிறது.  இந்த டிஸார்டரால் பாதிக்கப்பட்டவர்களின் மனம் எப்போதும் உணவைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும். உணவைப் பார்க்கும்போது வாயைக் கட்டுப்படுத்த முடியாது. சிலருக்கு உணவின்மீதான நாட்டம் குறைந்து அதனால் உடல் பாதிப்பு ஏற்படும். இந்த பிரச்னையால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
Anorexia Nervosa  - இது பலருக்கும் நன்கு தெரிந்த பிரச்னை. பெரும்பாலும் வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளம்பருவத்தில் உள்ள பெண்களே அதிகம் இந்த பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர்.  
கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்போதே மிகவும் ஒல்லியாக இருந்தாலும் தான் மிகவும் குண்டாக இருப்பதாக நினைத்து தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் ஒருவித மனநோய் என்றும் கூறலாம்.
அறிகுறிகள்
இவர்கள் உணவு உண்பதில் அதிகக் கட்டுப்பாடு வைத்திருப்பார்கள். 
வாரத்திற்கு நான்கைந்து முறை எடையை பரிசோதித்துப் பார்த்துக்கொள்வார்கள்.
நிறைய உணவுகளை தவிர்த்து கலோரி கணக்கு வைத்து உணவு எடுத்துக்கொள்வார்கள். 
 சம வயதில் உள்ளவர்களைவிட உடல் வளர்ச்சி குறைவாகவே இருக்கும்.
பாதிப்புகள் 
இவர்களுக்கு மூளை பாதிப்பு, ஒரே நேரத்தில் பல உறுப்புகள் செயலிழத்தல், எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படுதல், இதயம் சம்பந்தமான பிரச்னைகள், குழந்தையின்மை, நகம் மற்றும் முடி வளர்ச்சி தடைபடுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
Bulimia Nervosa  
இந்த பிரச்னையும் ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிகம். இதில் குறைந்த நேரத்திலேயே அளவுக்கதிகமான உணவை சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.  உணவு தொண்டையை அடைத்து வயிற்றுவலியை உண்டாக்கும் வரை சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் இதை கட்டுப்படுத்த நினைத்தாலும் முடியாது. 
அறிகுறிகள்
சாப்பிட்டுவிட்டு அதிகப்படியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல்.
வலுகட்டாயமாக வாந்தி எடுத்தல், மலமிளக்கிகளை எடுத்துக்கொள்ளுதல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.
சாதாரணமாக இருப்பவர்களை விட இவர்களுக்கு எடையை கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். 
உடல் எடை கூடுவதைக் குறித்து ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும்.
பொது இடங்களில் செல்வதற்கும் சாப்பிடுவதற்கும் கூச்சப்படுவார்கள்.
தங்களுடைய உடல் அமைப்பை குறித்து கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.
பாதிப்புகள்
உடலில் சேரும் அதிக்கப்படியான சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை சரியாக செரிக்காது. 
இவர்கள் உடல் வறட்சி, தீவிர வாயுத்தொல்லை, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.
அதீத உணவை உண்ணுதல் (Binge Eating Disorder) 
கட்டுப்பாட்டு எல்லையை மீறி உணவை உட்கொள்ளும் இந்த வகைக்கு binge eating disorder என்று பெயர். உணவின்மீது கட்டுப்பாட்டை இழந்த நிலைக்குத் தள்ளப்படுவர். புலிமியா நர்வோசாவை போன்றே  இளம் மற்றும் வளர் இளம்பருவத்தினர் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டாலும் அதைவிட சற்று வித்தியாசமானது. 
குறுகிய காலத்தில் அதிகமுறை சாப்பிட்டாலும் ஒவ்வொரு முறையும் அளவுக்கதிகமாக சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால் புலிமியாவைப்போல் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோ, உடல் எடையைப் பற்றிக் கவலைப்படுவதோ இவர்களிடம் இருக்காது. 
அறிகுறிகள்
அடிக்கடி ஒளித்து வைத்து  யாருக்கும் தெரியாமல் எடுத்து சாப்பிடுதல்
பசிக்காதபோது சாப்பிட்டுக்கொண்டே இருத்தல்
சரியாக படுத்து உறங்கமுடியாமல் கஷ்டப்படுதல்
தான் சாப்பிட்டதைக் குறித்தே வெட்கப்பட்டு, துயரத்தில் ஆழ்ந்து குற்றம் செய்ததுபோன்ற உணர்வை வளர்த்துக்கொள்வர்.
பாதிப்புகள்
மன அழுத்தம்
அதீத உடல் பருமன்
இதய பாதிப்பு
டைப்2 நீரழிவு நோய்
பக்கவாதம் போன்ற பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
இதுபோன்ற உணவு சம்பந்தப்பட்டக் கோளாறுகள் மரபு வழியாகக்கூட சிலருக்கு ஏற்படலாம். சிலருக்கு ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும். சிலர் நீண்ட நாட்களாக சாப்பிடாமல் இருப்பதாலும் அல்லது டயட் முறையைப் பின்பற்றியதால்கூட இதுபோன்ற டிஸார்டரால் பாதிக்கப்படுவர். மூளை வளர்ச்சிக் குறைபாடு மற்றும் அதீத மன அழுத்தம் கூட காரணமாக இருக்கலாம். 
உடல் எடை பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தீவிர உடல் பிரச்னைகள் ஏற்படுவதோடு பல நேரங்களில் தற்கொலை செய்துகொள்ளும் முடிவும் வந்து வந்து போகும். சமூகத்தில் மற்றவர்களுடன் சகஜமாகப் பேசி பழகுவதில் சிரமம் ஏற்படும். பெரும்பாலும் யார் கண்ணிலும் படாத தனிமை விரும்பிகளாகவே இருப்பார்கள். 
எனவே இதுபோன்ற பிரச்னைகள் உடலில் தென்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com