காவிரி போராட்டத்தை திசை திருப்புவதே ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகரின் நோக்கம்: திருமாவளவன்
காவிரி மேலாண்மை வாரிய போராட்டம், ஆளுநர் சர்ச்சையை திசைத்திருப்பவே ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்துகளை பேசி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் இருவரையும் ஒருசேர கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் நடத்தப்படும் என்றும், கட்சி சாராதவர்களும் திமுக, அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் 23-ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அனுமதிப்பெற்று நடத்தப்பட்ட வைகோ பேரணியில், காவல்துறையினர் பாஜகவினரை ஊக்கமளிக்கும் வகையில் நடந்துக்கொண்டதே பிரச்னை ஏற்பட காரணம் என்றும் குற்றஞ்சாட்டினார்.
நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக தற்போது நடைபெறும் விசாரணை உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வராது என்றும், இந்த விவகாரத்தில் ஆளுநர் அலுவலகத்திற்கும், தலைமை செயலகத்திற்கும் அதிகார போட்டி நடைபெற்று வருவதால் பெண் நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார். ஒட்டுமொத்த மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்னை தொடர்பாக நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.