“நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - சுமித்ரா மகாஜன் பகிரங்க கடிதம்

“நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - சுமித்ரா மகாஜன் பகிரங்க கடிதம்
“நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - சுமித்ரா மகாஜன் பகிரங்க கடிதம்

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகளும், மாநில கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், மே 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள இந்தூர் மக்களவைத் தொகுதிக்கு பாஜக இன்னும் வேட்பாளரை வெளியிடவில்லை. காரணம் அது மூத்த தலைவர் சுமித்ரா மகாஜனின் தொகுதி.

மக்களவை சபாநாயகராக உள்ள சுமித்ரா மகாஜன் இந்தூர் தொகுதியில் இருந்து 1989ம் ஆண்டு முதல் 8 முறை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டவர். இருப்பினும், கட்சியில் 75 வயதினை கடந்தவர்கள் போட்டியிட வாய்ப்பில்லை என்ற முறையை பாஜக கடைபிடித்து வருகிறது. அதன் அடிப்படையிலே அத்வானிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், கட்சியின் தாமதம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள சுமித்ரா மகாஜன், தான் போட்டியிடவில்லை என்றும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், கட்சி வேட்பாளரை அறிவிப்பதில் தயக்கம் காட்டுவதாகவும், அதனால், இனியாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தக் கடித்தத்தில், “நாம் ஒரு அரசியல் தலைவர் அல்ல. என்னுடைய நிலைப்பாட்டை கட்சிக்கு தெளிவாக கூறியிருந்தேன். வயது வரம்பு கொள்கையை நடைமுறைப்படுத்த கட்சி நினைக்கிறது என்பது எனக்கு தெரியும். இருப்பினும், என்னுடைய தொகுதியில் வேறுஒரு வேட்பாளரை நிறுத்த கட்சி தயங்குகிறது. இதற்கு மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் சுமித்ரா மகாஜன். அவருக்கு வயது 75. கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்தூர் தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com