ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வுக்கு வைகோ கடும் கண்டனம்
ரேஷன் கடைகளில் விற்கப்படும் சர்க்கரையின் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்படுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ரேஷன் கடைகளில் விற்கப்படும் சர்க்கரையின் விலையை கிலோவுக்கு 13 ரூபாய் 50 காசுகளில் இருந்து 25 ரூபாயாக உயர்த்தி இருப்பதை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பழைய விலையில் சர்க்கரையைப் பெறலாம் என தமிழக அரசு அறிவித்திருப்பதால், மொத்தமுள்ள ஒரு கோடியே 98 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில், 18 லட்சத்து 64 ஆயிரம் பேர் மட்டுமே மானிய விலையில் சர்க்கரையை பெற முடியும் என வைகோ தெரிவித்துள்ளார்.
பொதுவிநியோக திட்டத்தை முழுமையாக மூடுவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள வைகோ, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு அடிபணியாமல், தமிழக அரசு உடனடியாக சர்க்கரை விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.