சுதீஷ் சொத்து மதிப்பு 336% உயர்வு - வேட்பு மனுவில் தகவல்

சுதீஷ் சொத்து மதிப்பு 336% உயர்வு - வேட்பு மனுவில் தகவல்

சுதீஷ் சொத்து மதிப்பு 336% உயர்வு - வேட்பு மனுவில் தகவல்
Published on

தேமுதிக இளைஞரணி தலைவரும், கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளருமான சுதீஷின் அசையும் சொத்துகளின் மதிப்பு 336 சதவிகிதம் அதிகரித்திருப்பது அவரது வேட்புமனு மூலம் தெரியவந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் பிரசார பணிகளில் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அன்றே இடைத்தேர்தலும் நடக்கிறது.

திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் மற்றும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்துவிட்டன. மேலும் வேட்பாளர்கள் அறிவிப்பையும் முடித்து வேட்புமனுவை தாக்கல் செய்ய ஆரம்பித்துவிட்டன. அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள, தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், தன் பெயரிலும் தனது குடும்பத்தினர் பெயரிலும் 60 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக சுதீஷ் தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். இவற்றில் அசையும் சொத்துகளின் மதிப்பு 17 கோடியே 18 லட்சம் ரூபாய். அசையா சொத்துகளின் மதிப்பு 42 கோடியே 99 லட்சம் ரூபாய்.

2014ஆம் ஆண்டு சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட போது சுதீஷ் மற்றும் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 33 கோடியே 91 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 2014 உடன் ஒப்பிடுகையில் தற்போது சுதீஷ் மற்றும் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 77 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 

குறிப்பாக அசையும் சொத்துகளின் மதிப்பு 336 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சொத்து மதிப்பு உயர்ந்துள்ள நிலையில் 2013 - 14 மற்றும் 2017 - 18 நிதியாண்டில் தாக்கல் செய்துள்ள வருமானவரி கணக்கில் தனது வருவாய் 53 சதவிகிதமும், தனது மனைவியின் வருவாய் 95 சதவிகிதமும் குறைந்திருப்பதாக சுதீஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com