தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் நடந்தது. அப்போது ராகுல் காந்தி அதில் பங்கேற்றுப் பேசிவிட்டு திடீரென அவையில் அமர்ந்திருந்த பிரதமரைக் கட்டி அணைத்தார். இதை எதிர்பார்க்காத பிரதமர் ராகுலை மீண்டும் அழைத்து தட்டிக் கொடுத்ததோடு கைகுலுக்கினார்.
இந்நிலையில் பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி ஒரு புது சர்ச்சையை கிளப்பியுள்ளார். தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுவாமி, தன்னை ராகுல் காந்தி கட்டியணைக்க பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது என்றும் ரஷ்யர்களும், கொரியர்களும் விஷ ஊசி செலுத்தி தங்கள் எதிரிகளை வீழ்த்த இந்த முறையை கடைபிடிக்க முயல்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடி உடனடியாக மருத்துவமனை சென்று, தனது உடலில் ஏதேனும் விஷ ஊசி செலுத்தப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும் என்றும் சுனந்தா புஷ்கர் உடலிலும் இதே போன்று விஷ ஊசி செலுத்தப்பட்டிருந்தது என்றும் கூறியுள்ளார். ராகுல் குறித்து சுவாமி இவ்வாறு கூறியிருப்பது தற்போது சர்ச்சையாகியுள்ளது.