
குரோஷியாவின் கோர்குலா தீவின் கடற்கரையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்பமுடியாத ஒரு கண்டுபிடிப்பை கண்டறிந்துள்ளனர். குரோஷியாவில் உள்ள ஜாதர் பல்கலைக்கழகம், கடந்த 2021-ம் ஆண்டு கோர்குலாவுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்தது.
அப்போது பல ஆண்டுகளுக்கு முன்பு செயற்கை தீவாக இருந்த சோலின் பழங்கால நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அதே ஆராய்ச்சியாளர்கள் நீரில் மூழ்கிய சோலின் கற்கால தளத்தைச் சுற்றி ஆய்வு செய்தனர். அப்போது மத்திய தரைக்கடலின் மேற்பரப்புக்கு அடியில் (13 - 16 அடியில்) 13 அடி அகலமுள்ள புதைந்துபோன பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான நெடுஞ்சாலையை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நெடுஞ்சாலை ஒரு பண்டைய Hvar கலாச்சாரத்தால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் அந்தசாலை ஒரு காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. இப்போது நீரில் மூழ்கியிருக்கும் சோலின் கற்கால தளத்தை கோர்குலா தீவுடன் அது இணைத்திருக்கலாம் எனவும் சந்தேகித்துள்ளனர் ஆய்வாளர்கள். இந்த வியக்க வைக்கும் கண்டுபிடிப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கற்கால சாலையானது கிமு 4,900க்கு முந்தையதாக இருக்கலாம், அதாவது சுமார் 7,000 ஆண்டுகள் பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குரோஷியாவில் உள்ள ஜாதர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாதா பரிகா என்பவரின் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றுள்ளது. இவருடன் டுப்ரோவ்னிக் அருங்காட்சியகங்கள், கோர்குலா நகர அருங்காட்சியகம் மற்றும் கஸ்டெலா நகரத்தின் அருங்காட்சியகம் போன்றவற்றின் ஆராய்ச்சியாளர்களும் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இக்குழுவானது ரேடியோகார்பன் பகுப்பாய்வைப் பயன்படுத்தி, அந்த சாலை பயன்படுத்தப்பட்ட ஆண்டை கணித்துள்ளனர். இந்த பகுதியில் கண்டறியப்பட்ட பழமையான தொல்பொருளில் இந்த சாலை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மேலும், அந்த சாலை மிகவும் கச்சிதமாகக் கற்கள் மற்றும் பலகைகளால் அடுக்குகளாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த நெடுஞ்சாலையின் கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஏனெனில் இது பிராந்தியத்தின் பண்டைய வரலாற்றை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. Hvar கலாச்சாரம் மிகவும் மேம்பட்ட ஒன்றாக இருந்தது. அந்த மக்கள் ஈர்க்கக்கூடிய கட்டமைப்புகளை உருவாக்கும் திறன் கொண்டவர்கள் என்பதையும் இது காட்டுகிறது.