ஐன்ஸ்டீன் கோட்பாடை விட வேதங்கள் சிறந்தது என ஹாக்கிங் கூறியுள்ளார்: மத்திய அமைச்சர் பேச்சு

ஐன்ஸ்டீன் கோட்பாடை விட வேதங்கள் சிறந்தது என ஹாக்கிங் கூறியுள்ளார்: மத்திய அமைச்சர் பேச்சு
ஐன்ஸ்டீன் கோட்பாடை விட வேதங்கள் சிறந்தது என ஹாக்கிங் கூறியுள்ளார்: மத்திய அமைச்சர் பேச்சு

ஐன்ஸ்டீனின் விதியைக் காட்டிலும் வேதங்களில் உயர்ந்த கோட்பாடுகள் உள்ளதாக மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் கூறியிருந்தார் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.

மணிப்பூர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 105வது இந்திய அறிவியல் மாநாட்டில் பேசியபோது இந்தக் கருத்தினை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டிருந்தார். ஹர்ஷ வர்தன் பேசுகையில், “சமீபத்தில் புகழ்பெற்ற பௌதீகவியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்சை நாம் இழந்திருக்கிறோம்.  ஐன்ஸ்டீனின் ‘E=mc2’ கோட்பாட்டை காட்டிலும் வேதங்களில் உயர்ந்த கோட்பாடுகள் உள்ளது என்ற கருத்தை  மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் பதிவு செய்திருக்கிறார்” என்றார். ஐன்ஸ்டீனின் ‘E=mc2’ கோட்பாடானது நிறைக்கும் ஆற்றலுக்கும்  இடையிலான சமத்தன்மையை விளக்குகிறது. விண்வெளியில் உள்ள ஆற்றல் எவ்வாறு நிறையாக மாறுகிறது, நிறை எங்கே போகிறது என்பதை இந்தக் கோட்பாடு விளக்குகிறது.

மருத்துவரான அமைச்சர் ஹர்ஷ் வர்தன் எந்த வேதக் கோட்பாட்டில் எந்த இடத்தில் இதற்கான ஆதரங்கள் உள்ளது என்பதை தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஊடகங்களில் இருக்கும் நீங்கள் கொஞ்சம் உழைத்து இதற்கான விளக்கத்தை கண்டுபிடியுங்கள், உங்களால் முடிவில்லை என்றால் அப்போது நான் ஆதாரத்தை உங்களுக்கு தருகிறேன்” என்று பதில் அளித்தார்.

ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் வேதங்கள் என்று கூகுளில் டைப் செய்தால் பல்வேறு இணைய பக்கங்கள் வருகிறது. அதில், மத்திய அமைச்சகத்தின் கீழ் வேதங்கள் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைய பக்கம் வருகிறது. அதில், சிவராம் பாபு என்பவரின் வேத அறிவியல் புத்தகத்தில் அவர், ‘ஐன்ஸ்டீனின் கோட்பாட்டை விட வேதங்களில் சிறந்த விதிகள் உள்ளது’ என்ற கருத்தை குறிப்பிட்டுள்ளார். 

இருப்பினும், ஹாக்கிங்கின் எழுத்துக்களில் இதுபோன்ற பதிவு இருப்பதாக தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் தரப்பில் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com