ஒலிம்பிக்கிற்கு அதிக வீரர்களை அனுப்பியுள்ள மாநிலங்கள் எவை?
இந்தியாவில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக்கிற்குச் சென்ற வீரர்-வீராங்கனைகளில் 40 சதவீதம் பேர் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அந்த வகையில் எந்தெந்த மாநிலங்களில் இருந்து எத்தனை சதவீத வீரர்கள் ஒலிம்பிக்கில் கால்பதிக்கும் கனவை நனவாக்கிக் கொண்டுள்ளனர் என்பதை பார்க்கலாம்.
விளையாட்டு மைதானங்களில் சிந்தும் வியர்வைகளை ஒலிம்பிக்கில் பதக்கமாக்க மாற்ற வேண்டும் என்பதே விளையாட்டு வீரர்கள் பெரும்பாலானோருக்கு உள்ள கனவு. அதற்காக மாவட்ட, மாநில, தேசிய அளவில் திறமைகளை வெளிப்படுத்தி ஒலிம்பிக்கில் தடம் பதிக்க வீரர்கள் அரும்பாடுபடுவர். அந்த வகையில் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு சுமார் 135 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இருந்து மொத்தம் 127 வீரர்-வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில் 40 விழுக்காட்டினர் இந்திய மக்கள் தொகையில் 4.4 விழுக்காட்டைக் கொண்ட ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக சுமார் 25 விழுக்காட்டு வீரர்களுடன் ஹரியானா ஒலிம்பிக்கிற்கு அதிக வீரர்களை தயார் செய்த மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மொத்தம் 31 பேர் ஹரியானாவில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு சென்றுள்ளனர். மகளிர் ஹாக்கி அணியைச் சேர்ந்த 9 பேர், மல்யுத்த விளையாட்டைச் சேர்ந்த 7 பேர், துப்பாக்கி சுடுதல் பிரிவில் 4 பேர் உள்ளிட்டோர் இந்த பட்டியலில் அடங்குவர்.
இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது பஞ்சாப் மாநிலம். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இந்தியாவில் இருந்து சென்றுள்ள மொத்த வீரர்களில் 15 சதவீதம் பேர், அதாவது 19 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். ஆடவர் ஹாக்கி அணியில் 11 பேர், துப்பாக்கி சுடுதல் பிரிவில் 2 பேர், தடகள பிரிவில் 3 பேர், மகளிர் ஹாக்கி அணியில் 2 பேர் மற்றும் ஒரு குத்துச் சண்டை வீரர் இப்பட்டியலில் அடங்குவர்.
ஒலிம்பிக்கிற்கு அதிக வீரர்களை அனுப்பியுள்ள மாநிலங்களின் பட்டியலில் 11 வீரர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது தமிழ்நாடு. டோக்கியோ சென்றுள்ள மொத்த இந்திய வீரர்கள் எண்ணிக்கையில் 8.7 விழுக்காட்டினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தடகள பிரிவில் 5 பேர், டேபிள் டென்னிஸில் 2 பேர், பாய்மர படகுப் போட்டியில் மூவர் மற்றும் வாள்வீச்சில் ஒருவர் போட்டியிட உள்ளனர்.
இப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது தடகளப்பிரிவில் கூடுதல் கவனம் செலுத்தும் கேரளா. டோக்கியோ சென்றுள்ள இம்மாநிலத்தைச் சேர்ந்த 8 பேரில் 6 பேர் தடகள பிரிவில் பங்கேற்கவுள்ளனர். இந்தப்பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 17 விழுக்காட்டினரைக் கொண்ட உத்தரபிரதேசம். ஆனால் ஒலிம்பிக்கிற்கு தேர்வாகி டோக்கியோ சென்றுள்ள மொத்த இந்தியர்களில் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் 6.3 விழுக்காட்டினர் மட்டுமே. இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் இருந்து 6 பேரும், மணிப்பூரில் இருந்து 5 பேரும் ஒலிம்பிக்கில் தடம்பதிக்க டோக்கியோ சென்றுள்ளனர்.