விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் செப்டம்பர் 21 ஆம் தேதி சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
நள்ளிரவு 12:00 மணிக்கு தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த தனது 55-வது பிறந்தநாள் விழாவில் திருமாவளவன் கலந்துகொண்டார். அப்போது கேக் வெட்டி தனது பிறந்தநாளை திருமாவளவன் மகிழ்ச்சியாக கொண்டாடினார். வடபழனியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இந்த நாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடுகிறோம். சாதியவாத, மதவாத சக்திகளை முறியடிக்க, சமூகநீதி காத்து சமத்துவத்தை வென்றெடுத்திட சென்னையில் செப்டம்பர் 21 ஆம் தேதி மாநில சுயாட்சி மாநாடு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெறுகிறது. இந்த நல்ல செய்தியை என் பிறந்த நாளில் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி” என்றார். மேலும், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியினையும் தொல்.திருமாவளவன் தெரிவித்துக்கொண்டார்.