சர்வதேச புத்தகத் திருவிழாவில் பங்கேற்க துபாய் சென்றார் மு.க. ஸ்டாலின்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தகத் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சார்ஜாவில் ஆண்டுதோறும் சர்வதேச புத்தகத் திருவிழா 11 நாட்கள் நடைபெறும். இதில் பங்கேற்க உலகின் பல நாடுகளில் இருந்தும் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த முறை சார்ஜா அரசு, திமுக கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினை சர்வதேச புத்தகத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைத்துள்ளது. சார்ஜா அரசின் இந்த அழைப்பை ஏற்று, ஸ்டாலின் துபாய் புறப்பட்டு சென்றுள்ளார். மேலும், தனக்கு அன்பளிப்பாக வந்த ஆயிரம் தமிழ் புத்தகங்களை சார்ஜா புத்தக ஆணையத்திற்கு ஸ்டாலின் வழங்க உள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற இந்த புத்தக திருவிழாவில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு உரையாற்றினார்.