சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்...! - ஸ்டாலின்
சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
கோவை மாநகரத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுந்தராபுரம் அருகே பெரியாரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது. அந்த சிலையில் மர்ம ஆசாமிகள் காவி சாயம் பூசியிருந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
மர்ம ஆசாமிகளின் இந்த செயல்களுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது பக்கத்தில், “என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார்! சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்” எனத் தெரிவித்துள்ளார்.