'உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடுக' - ஸ்டாலின்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31ஆம் தேதி வரை அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணயத்தின் சார்பில் மீண்டும் கூறிருப்பதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் கூட்டணி அமைத்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல், தொடர்ந்து அரசியல் சட்டத்தை மீறுகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.
உள்ளாட்சித்துறை அமைச்சரும், முதலமைச்சரும் கூறும் காரணங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்பது, தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தையே கேலி செய்யும் போக்கு என்பது சந்தேகமில்லை என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் அவகாசம் கேட்கும் மாநிலத் தேர்தல் ஆணையரிடம் , தமிழக ஆளுநர் உடனடியாக விளக்கம் கேட்க வேண்டும் என்றும், அரசியல் சட்டப்பிரிவின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.