“கருணாநிதியிடம் ஸ்டாலின் அரசியல் கற்றிருக்கிறார்”- கோவில்பட்டியில் கனிமொழி பேட்டி
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரான சிபிஎம் சீனிவாசனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட திமுக எம்பி கனிமொழி புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறும்போது, “ கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில், திமுக கூட்டணி கட்சி சிபிஎம் வேட்பாளர் சீனிவாசன் அமோக வெற்றி பெறுவார். காரணம், கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் தொகுதியில் மக்களுக்கு எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. ஆர்.கே நகர் தொகுதியில் இருந்து இங்கே வந்து போட்டியிடும் டிடிவி தினகரன் அந்தத் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்பது இங்குள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும். அதிமுக அரசின் மீது மக்கள் வெறுப்பாக இருக்கிறார்கள். எனவே எங்களுக்கு வெற்றி உறுதி.
மக்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியுமா என்பது குறித்து ஆட்சிக்கு வரக் கூடியவர்கள் கவலைப்பட்டால் சரி, டிடிவி தினகரன் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார் என தெரியவில்லை. கருணாநிதி ஆட்சியில் வருவாய் மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது. இலவச கலர்டிவி கலைஞர் கொடுக்கப்பட்டது. விவசாயிகளுக்கு 7000 கோடி வரை கடன் தள்ளுபடி செய்தது கருணாநிதிதான்.
எப்படி ஆட்சி நடத்தவேண்டும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதை ஸ்டாலின் கருணாநிதியிடம் கற்றுக்கொண்டுள்ளார். எனவே அதைப் பற்றிய கவலை டிடிவி தினகரனுக்கு தேவையில்லை. கோவில்பட்டியில் இரண்டாவது பைப்லைன் திட்டம் என்பது திமுக ஆட்சியில் துவக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படவில்லை மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திட்டம் முழுமை அடையும்.” என்றார்.