"ஆதாரத்துடன் நிரூபித்தால் எதையும் சந்திக்க தயார்”-ஸ்டாலினுக்கு காமராஜ் பதிலடி
இடைத்தரகர்களிடம் விவசாயிகள் ஏமாறக்கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் வேளாண் பாதுகாப்பு சட்டம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசியுள்ளார்.
திருவாரூர் அருகே கீலகாவாதுகுடி கிராமத்தில் அம்மா நகரும் நியாய விலை கடைத் திட்டத்தை தொடங்கி வைத்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசியதாவது “ நியாயவிலைக் கடைகளில் விற்பனை இயந்திரம் வழங்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகிவிட்டது. ஆகையால் அதில் எந்த பிரச்னையும் இல்லை. ரேஷன் அட்டைகளுக்கு உரியவர்கள் என்று தெரிந்தால் போதும், அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு விடும். விற்பனை இயந்திரம் செயல்படவில்லை என்பதற்காகவோ அல்லது மின்சாரம் இல்லை என்பதற்காகவோ பொருட்கள் வழங்குவதில் தடங்கல் இருக்கக் கூடாது.
புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவை பொருத்தவரை தமிழகத்தில் எந்தப் பிரச்னையும் கிடையாது. அத்திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டம்தான். ஆகையால் அதில் எந்த பிரச்னையும் கிடையாது. இடைத்தரகர்களிடம் விவசாயிகள் ஏமாறக்கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் அது. விவசாயிகளுக்கு பிரச்னை ஏற்படும்போது அதற்கு தீர்வு காணப்படும்.
கொரோனாவை வைத்துக் கொண்டு மிகப்பெரிய ஊழல் முறைகேட்டில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் “ஆதாரம் இல்லாமல் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் கூற முடியாது. தமிழகத்தில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் ஒரு எதிர்க்கட்சித் தலைவர். எதிரிகட்சித் தலைவர்போல் செயல்பட கூடாது. எதிர்க்கட்சித் தலைவராக ஆலோசனைகள் வழங்க வேண்டும், குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் அவர் நிரூபித்தால் நாங்கள் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்” என அமைச்சர் காமராஜ் கூறினார்