உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு அஞ்சுகிறது: ஸ்டாலின் விமர்சனம்
உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு அஞ்சுவதாக எதிர்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கும் வகையிலான மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் கொண்டுவந்தார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தன. பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது. அதிமுகவைப் பொறுத்தவரை சின்னமும் இல்லை; கட்சியும் இரண்டாக, மூன்றாக உடைந்து போயிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்ட தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும், தேர்தலை நடத்துவதற்கு கூடுதல் கால அவகாசத்தை அரசும், மாநில தேர்தல் ஆணையமும் கேட்டு வருகின்றன. இப்போது தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தி இருக்கிறது என்று குற்றம்சாட்டினார்.