திட்டமிட்டபடி கட்சராயன் ஏரியை பார்வையிடுவேன்: ஸ்டாலின் உறுதி!
முதலமைச்சரின் சொந்த தொகுதியான எடப்பாடியில் கட்சராயன் ஏரியைப் பார்வையிட திட்டமிட்டபடி நாளை செல்ல இருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சார்பாக தூர்வாரப்பட்ட கட்சராயன் ஏரியின் கரைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பேரில் அதிமுகவினர் உடைத்து சேதப்படுத்தியதாகப் புகார் தெரிவித்துள்ளார். திமுகவினரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் நடத்தவிருந்த பேச்சுவார்த்தை, முதலமைச்சர் மற்றும் டிஜிபியிடம் இருந்து சென்ற உத்தரவால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தொகுதி மக்களுக்காக அந்த ஏரியை முதலமைச்சரே தூர்வாரியிருந்தால் திமுக அந்தப் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும், குடிமராமத்து திட்டத்தில் கூட கட்சராயன் ஏரியைத் தூர்வார முடியாத முதலமைச்சர் பழனிசாமிக்கு, திமுக தூர்வாரியிருப்பது எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட உள்துறை செயலாளர் முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.