மாநில உரிமைகளை பறிக்க முயற்சி: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
தேசிய மருத்துவ ஆணையம் என்ற பெயரில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்க முயற்சிப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 25 உறுப்பினர்களைக் கொண்ட அந்த ஆணையத்தில் மாநில அரசுகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இது மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் மாநில அரசின் பங்கை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டுவதாக அமைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினர் நியமனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே நடப்பதும், மத்திய அரசின் உத்தரவுகளை மாநில அரசுகள் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என்பதும், கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கத்தை அவமதிப்பதாகும் என்று கவலை தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்விக்கும், மருத்துவர்களுக்கும், ஏழைகளுக்கும் முற்றிலும் விரோதமாக இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். ஆகையால் மாநிலங்களுக்கு பிரிதிநிதித்துவம் இல்லாத தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவில் அத்தியாவசியமான தேவைகளை மட்டும் மாற்றம் செய்து மோட்டார் வாகனத் தொழிலை நம்பியிருக்கும் லட்சக்கணக்கானவர்களை பாதுகாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.