வீழ்ச்சியின் விளிம்பில் தமிழக உற்பத்தி துறை : ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஊழலில் திளைக்கும் குதிரை பேர ஆட்சியால் உற்பத்தி துறையில் தமிழகம் வீழ்ச்சியின் விளிம்புக்கே சென்று விட்டதாக திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக உற்பத்தித்துறை 2016-17ஆம் ஆண்டில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது என ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 'தொலைநோக்கு திட்டம் 2023' அயர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதாக விமர்சனம் செய்துள்ள ஸ்டாலின், கடந்த ஆண்டில் வெறும் 1.65 சதவித வளர்சியை மட்டுமே உற்பத்தி துறையில் பெற்று தமிழகம் வரலாறு காணாத அளவிற்கு, மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து உள்ளதாக தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் தமிழகத்தை பின்னோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கும் இந்த குதிரை பேர ஆட்சி முடிவுக்கு வருவது மட்டுமே தமிழகத்தை காப்பாற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை என்றும், அந்தப் பணியை ஜனநாயக முறையில் செய்து முடிக்க மக்கள் தயாராக வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.