விஜயபாஸ்கர் மீது கொலை முயற்சி வழக்கு: ஸ்டாலின் வலியுறுத்தல்

விஜயபாஸ்கர் மீது கொலை முயற்சி வழக்கு: ஸ்டாலின் வலியுறுத்தல்

விஜயபாஸ்கர் மீது கொலை முயற்சி வழக்கு: ஸ்டாலின் வலியுறுத்தல்
Published on

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்பவர் மக்களுடைய உயிரை காப்பாற்றக் கூடியவராக இருக்க வேண்டும். ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களின் உயிரைப் பறிக்கும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனையில் தொடர்புடையவராக இருக்கிறார். நியாயமாக அந்த அமைச்சர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பான் மசாலா, குட்கா விவகாரம் தொடர்பாக பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். குட்கா விற்பனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் பெற்றதாக வெளியான தகவல் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக உறுப்பினர்கள், “ஊழல் அரசே ராஜினாமா செய்” என்ற முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “கடந்த ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் தேதி தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனை செய்த மாதவ்ராம் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர், சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையின்போது சில டைரிகள், குறிப்புகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் உள்ளன. அதில், முதல் இடத்தில் இருப்பது, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக இருக்கின்ற அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர். இதில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் பங்கு உள்ளது. இதற்கு முன்னால் சென்னை மாநகரத்தின் கமிஷனராக இருந்த ஜார்ஜ், இப்போது டிஜிபி-யாக இருக்கக் கூடிய ராஜேந்திரன் ஆகியோரின் பெயர்களெல்லாம் இதில் இடம்பெற்றுள்ளது. இவர்கள் எல்லாம் லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள் என்று தெளிவாக அந்த டைரியிலே இருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போதைய தலைமை செயலாளர் ராம்மோகன் ராவுக்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. 11.08.216 ஆம் தேதி பி.ஆர். பாலகிருஷ்ணன் என்ற வருமான வரித்துறை உயர் அதிகாரி அனுப்பியுள்ளார். இந்தப் பிரச்னையின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தி 10 மாதங்களுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து தினசரி பத்திரிகைகளிலும், வட இந்திய ஆங்கில ஊடகங்களிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த டைரி குறிப்பில், போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு தீபாவளி மாமூல் 15 லட்சம் ரூபாய், கிறிஸ்துமஸ் மாமூல் 15 லட்ச ரூபாய் என்று டிசம்பர் 2016 ஆம் ஆண்டில் மட்டும் 1.14 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குறிப்புகள் உள்ளன. சம்பந்தப்பட்ட அமைச்சர் விஜய பாஸ்கர் ரூ.40 கோடி லஞ்சம் வாங்கியுள்ளார்.

இன்று சட்டப்பேரவையின் நேரமில்லா நேரத்தில் (Zero Hour), இந்தப் பிரச்சனையைப் பற்றி பேச அனுமதிக்க வேண்டும் என்று கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கும், ஒத்திவைப்பு தீர்மானத்திற்கும் முன்கூட்டியே சபாநாயகரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் எங்களை பேசவே அனுமதிக்கவில்லை. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்பவர் மக்களுடைய உயிரை காப்பாற்றக் கூடியவராக இருக்க வேண்டும். ஆனால் இந்த அமைச்சர் மக்களின் உயிரைப் பறிக்கும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனையில் தொடர்புடையவராக இருக்கிறார். நியாயமாக அந்த அமைச்சர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும். எனவே முதல்கட்டமாக அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அதை எடப்பாடி பழனிசாமி செய்யமாட்டார். காரணம் அவர், ரூ.89 கோடி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் முதல் குற்றவாளியாக இருக்கிறார். இந்த குதிரைபேர ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர தொடர்ந்து திமுக போராடும்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com