கீழடி அகழாய்வுப் பணிகளை சீர்குலைக்க முயற்சி - ஸ்டாலின் குற்றச்சாட்டு

கீழடி அகழாய்வுப் பணிகளை சீர்குலைக்க முயற்சி - ஸ்டாலின் குற்றச்சாட்டு

கீழடி அகழாய்வுப் பணிகளை சீர்குலைக்க முயற்சி - ஸ்டாலின் குற்றச்சாட்டு
Published on

பண்டைய தமிழர் நாகரிகத்தை வெளிப்படுத்துவதாலும், காவிக் கொள்கைகளுக்கு ஏற்றதாக இல்லை என்பதாலும் மத்திய அரசும், அதிமுக அரசும் கைகோர்த்து கீழடி அகழாய்வுப் பணிகளை சீர்குலைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கீழடியில் மிகச்சிறந்த முறையில் அகழாய்வில் ஈடுபட்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ஸ்ரீராமன் என்பவர் நியமிக்கப்பட்டார். அந்த அதிகாரி, மூன்றாவது கட்ட அகழாய்வில் எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என்று கூறி அகழாய்வு நிறுத்தப்படும் எனத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று கூறியுள்ளார். 

மேலும், “அப்படி நிறுத்தப்படுவதற்கு அதிகாரி மாற்றம்தான் காரணம் என்பதை நம்பவில்லை என்று அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியிருப்பது வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் தொடர்பான மிக முக்கியமான அகழ்வாராய்ச்சியில் மத்திய - மாநில அரசுகள் கைகோர்த்து அந்தப் பணிகளுக்கு தடை ஏற்படுத்த எப்படியெல்லாம் முற்படுகின்றன என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் அளித்த உறுதிமொழியின்படி, கீழடி அகழாய்வுப் பணிகளை நிறுத்தாமல் தொடர வேண்டும்” என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மதுரைக் கிளையே, தமிழக அரசையும் சேர்த்து இந்த அகழ்வாராய்ச்சியை நடத்த வேண்டும் என்று தொல்லியல் துறைக்கு உத்தரவிட்ட பின்னரும், மத்திய அரசின் அதிகாரி ஒருவர், மூன்றாவது கட்டப் பணிகளை நிறுத்தப் போவதாக தன்னிச்சையாகக் கூறுவது ஆணவப் போக்காக அமைந்துள்ளது என்று ஸ்டாலின் சாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com