நவோதயா விவகாரத்தில் அரசு மேல்முறையீடு செய்யாதது ஏன்? ஸ்டாலின் கேள்வி
நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யாதது ஏன் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நவோதாயா பள்ளி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திணிக்க மத்திய பாஜக அரசு துடிப்பதும், அதற்கு இங்குள்ள அரசு துணை போவதும் வேதனையளிப்பதாகக் கூறியுள்ளார். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டபோது, இது அரசின் கொள்கை முடிவு என்று உச்சநீதிமன்றத்திற்குச் சென்று தமிழக அரசு தடைபெற்றது. ஆனால் தற்போது அரசின் கல்விக் கொள்கை முடிவு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல் இருப்பதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நவோதயா பள்ளி விவகாரத்தில் தமிழக அரசு இருமொழிக் கொள்கையை உறுதியுடன் நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாஜக மற்றும் அதிமுக அரசுகள் கூட்டணி வைத்து, மீண்டுமொரு மொழிப் புரட்சிக்கு வித்திட வேண்டாம் என்றும் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.