“மிசாவில் ஸ்டாலின் சிறை சென்றதற்கு அமெரிக்காவில் ஆதாரம் இருக்கிறது” - திமுக எ.வ.வேலு
திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து, திமுக சார்பில் அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. அமைச்சருக்கு எதிராக போராட்டங்கள் வேண்டாமென ஸ்டாலினும் நிர்வாகிகளுக்கு நேற்று அறிவுறுத்தினார்.
இந்நிலையில் ‘தியாகம் வளர்க்கும் திராவிடப் பெருவிழா’ என்ற தலைப்பில் திமுக சார்பில் சூளை பகுதியில் தெருமுனைக்கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் எ.வ.வேலு, விபி.கலைராஜன் எனப் பலர் கலந்து கொண்டனர். அப்போது திமுக மாநில கலை இலக்கிய அணி இணை செயலாளர் கலைராஜன் பேசினார்.
அப்போது அவர், “பாஜகவின் பிரமோத் மகாஜனின் உதவியாளராக இருந்து, அவர் மரணத்திற்கு பின் மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு சென்னை வந்தவர் பாண்டியராஜன். திராவிட இயக்க வரலாறு தெரியுமா அவருக்கு? ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது ஓயாமல் டெல்லிக்கு தொலைப்பேசியில் அழைத்து தகவல் கொடுத்துக் கொண்டே இருந்தவர் இவர். சார்ந்திருந்த இயக்கத்திற்கு உண்மையாக இருக்காதவர்” என்றார்.
முன்னாள் அமைச்சர் எவ.வேலு பேசும் போது, “மிசாவின் வரலாறு தெரியுமா பாண்டியராஜனுக்கு? ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றார் என்பதற்கு அமெரிக்காவின் வாஷிங்டனில் ரெக்கார்டு இருக்கிறது. இஸ்மாயில் கமிஷனின் அறிக்கையை கையோடு கொண்டு வந்திருக்கிறேன். நம் கட்சிக்காரர்கள் எழுதியதல்ல இது. உண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்பவர், தமிழர் நாகரிகத்தை பாரத நாகரிகம் என்று கூறுபவர் பாண்டிய ராஜன். தமிழர்களுக்கு ரெண்டகம் செய்கிறார் பாண்டியராஜன்” என்றார்.