இலங்கையில் தொண்டைமான் பெயர் நீக்கம்: வைகோ கண்டனம்
இலங்கையில் அரசு நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டிருந்த இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் தலைவர் தொண்டைமான் பெயர் நீக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலையகத் தமிழர்களின் மாபெரும் தலைவராக மட்டுமல்லாமல், வடக்கு-கிழக்கு மாகாணங்களின் ஈழத் தமிழர்களின் நலனில் சௌமியமூர்த்தி தொண்டமான் அக்கறையுடன் செயல்பட்டவர் என குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட தலைவரின் பெயர், இலங்கையில் அரசு அமைப்புகளுக்கு சூட்டப்பட்டிருந்த நிலையில் அதனை மைத்திரிபால சிறிசேன அரசு நீக்கியிருப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். தமிழர்களின் அடையாளங்களை முற்றிலும் அழிக்க நினைக்கும் இலங்கை அரசின் அநாகரிக நடவடிக்கைக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொண்டமான் பெயரை மீண்டும் சூட்ட இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதேபோல் இந்த விவகாரத்தில், பிரதமரும், முதலமைச்சரும் தலையிட்டு தொண்டமானின் பெயரை மீண்டும் அங்கு இடம்பெறச் செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் வேல்முருகனும் கேட்டுக்கொண்டுள்ளார்.