269 நாட்களாக பூட்டிக் கிடக்கும் எம்.எல்.ஏக்கள் அலுவலகங்கள் - மக்கள் நிலை நீதிமன்றத்திற்கு தெரியாதா?
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தீர்ப்புக்காக சுமார் 9 மாதங்கள் காத்திருந்த நிலையில், இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்து வழக்கின் காலத்தை மேலும் நீட்டித்துவிட்டார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் தகுதி நீக்கம் செய்ய எம்.எல்.ஏக்களின் தொகுதிகளைச் சேர்ந்த மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். காலையில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த நிலையில் 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக சட்டபேரவை செயலர் பூபதி அன்று மாலையே அறிவித்துவிட்டார். இதனால், 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் வரும், மீண்டும் அத்தொகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தினகரன் தரப்பினர் நீதிமன்றத்தை அணுகிய போது இடைத் தேர்தல் நடத்த தடைவிதிக்கப்பட்டது. வழக்கும் இரண்டு நீதிபதிகள் அமர்வின் விசாரணைக்கு சென்றது.
செப்டம்பர் மாதம் தொடங்கி சுமார் 5 மாதங்கள் விசாரணை நடைபெற்று ஜனவரியில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. ஏற்கனவே 5 மாதங்கள் ஆன நிலையில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வாரங்கள், மாதங்கள் என நாட்கள் உருண்டு கொண்டே சென்றது. தீர்ப்பு எப்பொழுது வெளியாகும் என்றே தெரியாது என்ற நிலை வந்தது. 4 மாதங்களுக்கு மேல் சென்ற நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று நேற்று செய்திகள் வெளியானது. அதனால், 9 மாதங்களாக நீடித்து வரும் பிரச்னைக்கு இந்தத் தீர்ப்பின் மூலம் முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதாவது, இந்தத் தீர்ப்பு வெளியாகும் முன்பு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் விமர்சனங்கள் கூறிய கருத்தில் இதுவே மிகவும் கால தாமதம் என்று தங்களது வருத்தத்தை பதிவு செய்தனர். அப்படி இருக்கையில், இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தது எல்லோரிடத்தும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகரின் முடிவு சரி அல்லது தவறு என எதாவது ஒரு தீர்ப்பை சொன்னால் போதும், இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் என்ற மனநிலையில்தான் எல்லோரும் இருந்தார்கள். ஆனால், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளதால், மூன்றாவது நீதிபதி சொல்லும் தீர்ப்பை பொறுத்து முடிவு எட்டப்படும். நீதிபதி குலுவாடி ரமேஷ் வழக்கை விசாரிக்க உள்ள 3வது நீதிபதியை இன்றைக்குள் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது நீதிபதியின் தீர்ப்போடு எந்த நீதிபதியின் தீர்ப்பு ஒத்துப் போகிறதோ அதுவே இறுதித் தீர்ப்பாக எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பை எவ்வளவு காலத்திற்குள் சொல்ல வேண்டும் என்ற வரையறை இல்லை என்பது இங்குள்ள சட்ட நியதி. அதனால், எப்பொழுது தீர்ப்பு வெளியாகும் என்பதை கணிக்க முடியாது.
ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதால் பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள், மேயர்கள் யாரும் இல்லாத நிலை உள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகமே முடங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில் தற்போது 18 தொகுதிகளுக்கு எம்.எல்.ஏக்களும் இல்லை. 9 மாதங்களாக எம்.எல்.ஏக்களின் அலுவலங்கள் சீல் வைத்து பூட்டிக் கிடக்கின்றன. உள்ளாட்சி பிரதிநிதிகளும், எம்.எல்.ஏக்களும் இல்லாமல் அந்தத் தொகுதிகளின் மக்கள் தங்களது குறைகளை யாரிடம் சொல்வார்கள்? இப்போது சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் சார்ந்த குறைகளை யார் தெரிவிப்பார்கள்? எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாடு நிதி எப்படி செலவிடப்படும்? இப்படி பல கேள்விகளுக்கு விரிவாக விடை இல்லை. வாக்களித்த மக்கள் தான் இந்தப் பாதிப்பை முழுவதுமாக சுமக்கிறார்கள்.
மக்களின் இந்தப் பிரச்னைகளை நீதிமன்றத்திற்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கையில் இத்தனை கால தாமதம் ஏன் என்று பலரும் வருத்தப்படுகிறார்கள். மக்களின் கடைசி நம்பிக்கைக்குரிய இடம் இன்றுவரை நீதிமன்றம்தான். நீதிமன்றமும் விரைவில் அதனை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் கருதுகிறார்கள்.
காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட 18 தொகுதிகள் விபரம்:
1. கோதண்டபாணி (திருப்போரூர்), 2. முருகன் (அரூர்), 3. பாலசுப்ரமணியன் (ஆம்பூர்)
4.உமாமகேஸ்வரி (விளாத்திகுளம்), 5.முத்தையா (பரமக்குடி), 6.ஏழுமலை (பூந்தமல்லி)
8.பார்த்திபன் (சோளிங்கர்), 9.ஜெயந்திபத்மநாபன் (குடியாத்தம்), 9.சுந்தர்ராஜ் (ஒட்டபிடாரம்)
10.தங்கதுரை (நிலக்கோட்டை), 11.கதிர்காமு ( பெரியகுளம்), 12.வெற்றிவேல் (பெரம்பூர்)
13.ரெங்கசாமி (தஞ்சை), 14.சுப்பிரமணியன் (சாத்தூர்), 15.கென்னடிமாரியப்பன் (மானாமதுரை)
16.செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), 17.தங்கதமிழ்செல்வன் (ஆண்டிபட்டி), 18.பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி)