உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
தென் மாநிலங்கள் அதிக வரி செலுத்தினாலும், குறைவான நிதியையே பெறுவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
இதே கருத்தினை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்த நிலையில், அவருடன் சித்தராமையாயும் தற்போது இணைந்துவிட்டார்.
இதுகுறித்து சித்தராமையா கூறுகையில், “வரலாற்றில், வட மாநிலங்களுக்கு தொடர்ந்து தென் மாநிலங்கள் மானியங்களை அளித்து வருகின்றன. 6 தென் மாநிலங்களும் அதிக வரி செலுத்துகின்றன. ஆனால் குறைவாகவே நிதி பெறுகின்றன. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், உத்தர பிரதேச மாநிலம் செலுத்தும் ஒவ்வொரு 1 ரூபாய் வரிக்கும், ரூ1.79 நிதி பெறுகிறது. ஆனால், கர்நாடாக மாநிலமோ ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும், 47 பைசாதான் பெறுகிறது.
மாநிலங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய வேண்டிய தேவையை ஏற்றுக் கொள்ளும் வேளையில், நாங்கள் உருவாக்கிய வளர்ச்சிக்கான வெகுமதி எங்கே?. அனைத்து மாநிலங்களையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு திட்டங்களை வகுக்க வேண்டும்” என்று கூறினார்.
தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவும் இதே கருத்தினை தெரிவித்துள்ளார். தமிழத்தில் அதிமுகவும் தனது நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கவில்லை என்று நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது.

