முதல்வரை அவதூறாகப் பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசா மீது அதிமுக புகார்!
தமிழக முதல்வர் பழனிசாமியை அவதூறாக பேசியதாக, திமுகவை சேர்ந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திருமாறன் தலைமையில் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவிடம் புகார் அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நேற்றைய தினம் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஆ.ராசா தேர்தல் பரப்புரையில் போது மிக தரக்குறைவான கருத்துக்களை கூறினார். அவர் மனித உறவுகளையும், தாய்மார்களையும் கொச்சைப்படுத்து விதமாக பேசி வருகிறார். முதல்வர் மீதும் தொடர்ந்து அவதூறு பேச்சுகளை ஆ.ராசா பேசி வருகிறார். தொடர்ந்து இதுபோன்று அவர் பேசி வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர், தேர்தல் பரப்புரை செய்ய கூடாது என தேர்தல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளோம். இந்தப் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு உறுதியளித்துள்ளார். திமுக தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்கிறது. மக்கள் முகம் சூழிக்கும் அளவுக்கும், தாய்மார்கள் முகம் சூழிக்கும் அளவுக்கு உள்ளது" என்றார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதேபோன்று முதலமைச்சர் குறித்து ஆ.ராசா பேசியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேவேளையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோரது அரசியல் வாழ்க்கையை மையப்படுத்தியே குழந்தை உதாரணத்தை தாம் பேசியதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பெரம்பலூரில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தமது பேச்சு வேறுவிதமாக திரிக்கப்பட்டு பரப்பப்படுவதாக குற்றச்சாட்டினார்.
"ஸ்டாலின், முதல்வர் பழனிசாமியை அரசியல் குழந்தைகளாக உருவகப்படுத்தி பேசினேன். எனது பேச்சை வெட்டியும், ஒட்டியும் சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக சித்தரிக்கப்படுகிறது. அரசியலில் இருவரின் ஆளுமைகளை குழந்தைகளாக உவமைப்படுத்தி பேசினேன். முதலமைச்சரை அவதூறாக பேசியதாக கூறுவது தவறானது" என்றார் ஆ.ராசா.
இதனிடையே, திமுகவினர் கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்தவேண்டும் எனவும், பரப்புரை செய்யும்போது திமுகவின் மரபையும், மாண்பையும் மனதில் வைத்து செயல்படுங்கள் எனவும், கண்ணியக்குறைவான பேச்சுக்களை கட்சித்தலைமை ஒருபோது ஏற்காது எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

