மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக முடிவெடுப்பதற்கு முன் அதனை எதிர்க்கும் மாநிலங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரௌத், மாட்டிறைச்சி தடை விவகாரத்திற்கு பல மாநில அரசுகள் கண்டனம் தெரிவித்துள்ளதாக கூறினார். மேலும் இவ்வாறான உணர்வு மற்றும் உணவு தொடர்பான விவகாரங்களில் முடிவெடுப்பதற்கு முன், அதில் மாற்றுக்கருத்து உள்ள மாநிலங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் அவர்களின் கருத்துகளை கேட்டிருந்தால் இப்பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்திருக்காது என்றும் அவர் தெரிவித்தார். சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே அடுத்த மாதம் கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும், இதன்மூலமாக மகாராஷ்திரா மாநிலத்தைப் போல கோவாவிலும் சிவசேனா பலமாக கால்பதிக்கும் என்றும் சஞ்சய் ரௌத் தெரிவித்தார். மகாராஷ்திராவின் அண்டை மாநிலமான கோவாவில் கிறிஸ்துவர் பெருமளவு உள்ளதால் நீண்ட ஆண்டுகளாக அம்மாநிலத்தில் கால் பதிக்கும் முயற்சியில் சிவசேனா
தோல்வியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

